Saturday, October 1, 2016

மீண்டும் ஒரு ரயில் பயணம்!

திருவான்மியூர் ரயில் நிலையத்திலிருந்து எக்மோருக்கு டைரக்ட் ரயில் கிடையாது, இடையில் போர்ட்டில்  இறங்கி ரயில் மாற வேண்டும். மணி இரவு 8:15, போர்ட்டில் இறங்கி விட்டேன், எக்மோர் ரயிலுக்காக காத்திருக்கிறேன். போர்ட்டில் இருந்து எக்மோருக்கு இடையில் ஒரு ரயில் நிறுத்தம் தான்.ஏறியவுடன் நான் அமரவில்லை, சற்று உள்ளே தள்ளி நின்று கொண்டேன். அவ்வளவாக நெரிசல் இல்லை, அனைவருக்கும் இருக்கைகள் இருந்தன, எனக்கும் கூட, ஆனால் இறங்க வேண்டிய இடம் அருகாமையானதால் நான் நின்று கொண்டு தான் இருந்தேன். அடுத்து ஒருவன் ஏறினான் , நாகரிகமாக உடை அணிந்திருந்தான். வலது கையில் இரண்டு மோதிரங்கள். 23  - 25 வயதிற்குள்ளாக தான் இருப்பான், ஏறியவுடன் கம்பியையும் பிடிக்கவில்லை, தன்  கைபேசியை எடுத்து ஏதோ நோண்டுகிறான். தன் அழகுச் சட்டையை சரி செய்கிறான், அவன் கால் பாதி ரயிலிலும், மீதி வெளியிலும் இருந்தது. என்ன மக்கள்?  அந்த இடத்தில் இருந்து கொண்டு தான் இதனைச் செய்ய வேண்டுமோ? அவனை அழைத்துச் சொல்ல வேண்டும் போல் இருந்தது, ஆனால் செய்யவில்லை!

                     ஈசன் படத்தின் "வந்தனாமா வந்தனம்" பாடலை கடைசி இருக்கையில் ஐந்து ஆறு பேர் கொட்டு அடித்து பாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த குரல்கள் நன்றாக இருந்தன. கண் தெரியாதவர்கள் போல, நடந்து வந்தால் ஒரு ரூபாய் காசு போட எடுத்து வைத்துக் கொண்டேன்.  ஆனால் யாரும் வர வில்லை, விட்டு விட்டேன். 

                   எக்மோர் ரயில் நிலையம் வந்து விட்டது, இறங்குகிறேன். இரண்டு கண் தெரியாத ஆணும் பெண்ணும் 40 வயதிருக்கும்,  அமர்ந்திருந்தார்கள். இரண்டு வினாடி நின்று பார்த்தேன். அவர்கள் எதாவது தட்டு வைத்திருந்தால் அந்த ஒரு ரூபாயை போடலாம் என்று பார்த்தேன். பாவம், என் செய்வார்கள் அவர்கள்? நான் நின்றது கூட அவர்களுக்குத் தெரியாது. கடந்து வந்து விட்டேன் இருவரையும்.
                   
                   ஒன்பதாவது பிளாட்போறம் வந்தாகி விட்டது, hotchips இல் வாங்கி வந்த சாம்பார் சாதம் [பழைய சாதத்தில் பழைய சாம்பார் விட்டு பிசைந்தது போல் இருந்தது.பசியினால் சாப்பிட்டு விட்டேன். ஆசையாக வாங்கி வந்த கோபி 65 யும் ருசியாக இல்லை. curd rice'உம் நாக்குக்கு தோதாகப் படவில்லை. தூக்கி எரிந்து விடலாம் என்றெண்ணினேன்.

                    இங்கு யாரவது பிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் கொடுக்கலாம், ரயில் புறப்படுவதற்குள் வந்து விடலாம் என நடந்தேன். அப்போது, எங்கிருந்து வந்தார்கள் அவ்விருவரும்? நான் பார்த்த அதே இரண்டு பேர், கண் பார்வை இழந்தவர்கள்.

                     அந்தப் பெண்ணை தொட்டு நிறுத்தினேன். இருவரும் நின்று விட்டார்கள். "இதுல சாப்பாடு இருக்கு தயிர் சாதம், மிச்சமானது தான் உங்களுக்கு வேணும்னா சாப்டுக்குங்க" என்றேன். 

ஒரு வினாடி மௌனம்.

"தேங்க்ஸ் ma " என்றார் அவர்.

வேகமாக நடந்து வந்து விட்டேன் அங்கிருந்து.

ஏதோ தோன்றுகிறது மனதில், என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இவர்களுக்கு என்னால் ஏதும் செய்ய முடியுமா? கண்டிப்பாக முடியும்! அவர்களுக்குள் இருக்கும் இயலாமையை விட என்னிடம் அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன்.


No comments:

Post a Comment

சின்ன சின்ன கிளிகளே

சின்ன சின்ன கிளிகளே   தங்க முத்து வண்ணமே  என் சிறகு நீங்களே  பறக்கத்  துடிக்கிறேன்  வலிமை கொடுங்களேன்  மேகம் தொட வாருங்கள்  விண்மீன் காணலாம்...