Saturday, October 1, 2016

ஒரு மாலை மழைப் பொழுது!

எங்கோ தேவதைகள் சிரிக்க 
மழையாய் மண்ணில்!

அந்த கணப் பொழுதில் 
பேருந்தின் ஜன்னல் வழியாய் 
மழைத் துழியிநூடே 
உன் முகம் வழுக்கட்டயமாய் 
என் கண்களுக்குள் எட்டிப் பார்கிறது

கனவோ .. நினைவோ ...
என்னவென்பது தெரியவில்லை
தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை!
--
காலை முதல் சுட்டு எரித்த 
வெப்பக் காற்று 
என்ன மாயம் கண்டது ?

மண் வாசம் கனிந்து,
சில்லிட்டு ,
பட்டாம் பூச்சியாய் 
முகத்தை வருட வந்திருக்கிறது?

இப்படியாய் நீயும் 
என் செய்தாய் என்னை ?

உன்னால்,
மழையும் அலையும் 
மிகவும் பிடித்து விட்டது 
என் மனதாய்
அவை பிரதிபலிப்பதால்!

காத்திருத்தல்

காத்திருக்கும் வாய்ப்பை இழந்தவர்கள்
அதனை சுகமான வலி
என யூகித்துக்கொள்ள
வாய்ப்பிருக்கிறது!

டாஸ்_ _ _

எவ்வளவு குடித்தும் 
தாகம் அடங்கவில்லை...

-டாஸ்மாக்!

எழுதப் படாத சுதந்திரம்!

சொல்லப்படாத
வார்த்தைகளில்
ஒளிந்திருக்கிறது
வாழ்வின் மர்மம்
மட்டுமல்ல

தனி மனித
சுதந்திரமும் கூட ...

மௌனம் புனிதமானது!

எவ்வளவோ யோசித்தாகி விட்டது,
இன்னும் தாமதம் வேண்டாம்!

மௌனம் என்பது
என்றுமே பதில் ஆகிவிடாது!

சிரிப்பு -அழுகை
சலனமில்லா பார்வை - முறைத்தல்
வெற்றுச் சிரிப்பு - 
எல்லாம், பார்ப்பவர்க்கு மட்டுமே,
எல்லாம், அர்த்தம் சொல்லிவிடாது!

ஆழ் மனதின்

கூக்குரல்,
கடல் அலை ஓசையாய்,
என்றுமே உறங்குவதில்லை!

நினைத்ததை சொல்லவும்

சொன்னதை செய்யவும் 
எந்த மனிதருக்கும் உரிமை உண்டு!

அதில், ஒரு துளி ஏனும் 

சுய நல நஞ்சு 
இருக்குமே ஆனால்,
அதைக்காட்டிலும்,
மௌனமே புனிதமானது!

மழைக்காக ஒரு கவிதைத் தூறல்!

உன் சத்தம் மட்டுமே
போதுமானது
என் ஆழ்மனதின்
மௌனங்களைத்
தட்டி எழுப்ப!

மீண்டும் ஒரு ரயில் பயணம்!

திருவான்மியூர் ரயில் நிலையத்திலிருந்து எக்மோருக்கு டைரக்ட் ரயில் கிடையாது, இடையில் போர்ட்டில்  இறங்கி ரயில் மாற வேண்டும். மணி இரவு 8:15, போர்ட்டில் இறங்கி விட்டேன், எக்மோர் ரயிலுக்காக காத்திருக்கிறேன். போர்ட்டில் இருந்து எக்மோருக்கு இடையில் ஒரு ரயில் நிறுத்தம் தான்.ஏறியவுடன் நான் அமரவில்லை, சற்று உள்ளே தள்ளி நின்று கொண்டேன். அவ்வளவாக நெரிசல் இல்லை, அனைவருக்கும் இருக்கைகள் இருந்தன, எனக்கும் கூட, ஆனால் இறங்க வேண்டிய இடம் அருகாமையானதால் நான் நின்று கொண்டு தான் இருந்தேன். அடுத்து ஒருவன் ஏறினான் , நாகரிகமாக உடை அணிந்திருந்தான். வலது கையில் இரண்டு மோதிரங்கள். 23  - 25 வயதிற்குள்ளாக தான் இருப்பான், ஏறியவுடன் கம்பியையும் பிடிக்கவில்லை, தன்  கைபேசியை எடுத்து ஏதோ நோண்டுகிறான். தன் அழகுச் சட்டையை சரி செய்கிறான், அவன் கால் பாதி ரயிலிலும், மீதி வெளியிலும் இருந்தது. என்ன மக்கள்?  அந்த இடத்தில் இருந்து கொண்டு தான் இதனைச் செய்ய வேண்டுமோ? அவனை அழைத்துச் சொல்ல வேண்டும் போல் இருந்தது, ஆனால் செய்யவில்லை!

                     ஈசன் படத்தின் "வந்தனாமா வந்தனம்" பாடலை கடைசி இருக்கையில் ஐந்து ஆறு பேர் கொட்டு அடித்து பாடிக் கொண்டு இருந்தார்கள். அந்த குரல்கள் நன்றாக இருந்தன. கண் தெரியாதவர்கள் போல, நடந்து வந்தால் ஒரு ரூபாய் காசு போட எடுத்து வைத்துக் கொண்டேன்.  ஆனால் யாரும் வர வில்லை, விட்டு விட்டேன். 

                   எக்மோர் ரயில் நிலையம் வந்து விட்டது, இறங்குகிறேன். இரண்டு கண் தெரியாத ஆணும் பெண்ணும் 40 வயதிருக்கும்,  அமர்ந்திருந்தார்கள். இரண்டு வினாடி நின்று பார்த்தேன். அவர்கள் எதாவது தட்டு வைத்திருந்தால் அந்த ஒரு ரூபாயை போடலாம் என்று பார்த்தேன். பாவம், என் செய்வார்கள் அவர்கள்? நான் நின்றது கூட அவர்களுக்குத் தெரியாது. கடந்து வந்து விட்டேன் இருவரையும்.
                   
                   ஒன்பதாவது பிளாட்போறம் வந்தாகி விட்டது, hotchips இல் வாங்கி வந்த சாம்பார் சாதம் [பழைய சாதத்தில் பழைய சாம்பார் விட்டு பிசைந்தது போல் இருந்தது.பசியினால் சாப்பிட்டு விட்டேன். ஆசையாக வாங்கி வந்த கோபி 65 யும் ருசியாக இல்லை. curd rice'உம் நாக்குக்கு தோதாகப் படவில்லை. தூக்கி எரிந்து விடலாம் என்றெண்ணினேன்.

                    இங்கு யாரவது பிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் கொடுக்கலாம், ரயில் புறப்படுவதற்குள் வந்து விடலாம் என நடந்தேன். அப்போது, எங்கிருந்து வந்தார்கள் அவ்விருவரும்? நான் பார்த்த அதே இரண்டு பேர், கண் பார்வை இழந்தவர்கள்.

                     அந்தப் பெண்ணை தொட்டு நிறுத்தினேன். இருவரும் நின்று விட்டார்கள். "இதுல சாப்பாடு இருக்கு தயிர் சாதம், மிச்சமானது தான் உங்களுக்கு வேணும்னா சாப்டுக்குங்க" என்றேன். 

ஒரு வினாடி மௌனம்.

"தேங்க்ஸ் ma " என்றார் அவர்.

வேகமாக நடந்து வந்து விட்டேன் அங்கிருந்து.

ஏதோ தோன்றுகிறது மனதில், என்ன செய்து கொண்டிருக்கிறேன்? இவர்களுக்கு என்னால் ஏதும் செய்ய முடியுமா? கண்டிப்பாக முடியும்! அவர்களுக்குள் இருக்கும் இயலாமையை விட என்னிடம் அதிகமாக இருப்பதாக நினைக்கிறேன்.


ஓர் இரவு

 நடுநிசி நிசப்தம் 
புத்தகத் தாளின் ஓசை
உறங்காத விழிகள் ...

ஒரு சொல்!

தினமும் அந்த வண்டிப் பக்கம் என் கண்ணு போகாம இருந்ததில்ல ...
பஸ்சுக்காக காத்துகிட்டு இருக்க கூட்டத்தையும் தாண்டி, என் கண் அங்க தன் போகும் :) 
அங்க இருந்து வர தோசை வாசனை அப்படி!
    சாதாரண தள்ளு வண்டி, அதுல ஒரு அடுப்புல  ஒரு தோசை சட்டி , ஒரு அடுப்புல பணியாரச்சட்டி, ஒரு ஓரத்துல இட்லி சட்டில இருந்து ஆவி பறந்துட்டு இருக்கு ...என்ன ஒரு கண் கொள்ளாக் காட்சி!
    அத சுத்தி ஆளுங்க கைல தட்டு வச்சுட்டு, அடுத்த இட்லி நமக்குதான்னு ஏக்கமா ஒரு பார்வை பார்த்துட்டு இருக்கறத பார்த்தாவே பசி எடுத்திடும் ...
    எப்ப இந்த வண்டிய தாண்டி போகும் போதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வரும் .......
நான் சின்ன பிள்ளைய இருந்த போது, நான், அம்மா, அக்கா மூணு பேரும் பஜார் போனப்போ ரோட்டு ஓரத்துல இருந்த தள்ளு வண்டில "மசாலா பூரி" வாங்கி சாபிட்டுட்டு இருந்தோம். அந்த வழில வண்டில போன எங்க மாமா, வண்டிய நிறுத்திட்டு வந்து அம்மாக்கு சரி 'டோஸ்' ...பிள்ளைங்கள கூட்டிட்டு வந்து இப்படி ரோட்டுல நின்னு சாப்பிட வைக்கிரியான்னு ... எங்க ரெண்டு பேர்கிட்டயும் "கண்ணு ...இனி ஏதாது வேணும்னா, வீட்டுக்கு பார்சல் வங்கி போயி சாப்பிடனும்.ரோட்டுல நின்னு சாப்பிட கூடாது என்ன ? சரியா?"
    அந்த வார்த்தைக்கு மரியதையான்னு தெரில ...
ஆனா என் கால் ரோட்டு கடை பக்கம் அடி எடுத்து வைக்க என் மனசு சமதிச்சதில்ல...
நாம கொடுத்து வைச்சது அவ்ளோ தான் ....தோசைக்கு :)

பிச்சை

பிச்சை
கோபம் வருகிறது 
வயதுள்ளவன் செய்யும் போது ...
எரிச்சல் வருகிறது
அறிவுள்ளவன் செய்யும் போது ...
பரிதாபம் வருகிறது
வயதானவன் செய்யும் போது ...
கதையாக வருகிறது 
இறைவன் செய்த போது !

ம‌ழைச் சார‌லுக்கு ஒரு க‌டித‌ம்

உன்னை காண‌ அவ‌ளுக்கு எத்த‌னை நாட்களாய் ஆசை. உன்னை ப‌ற்றி ப‌டித்திருக்கிறாள், அவள் ந‌ண்ப‌ர்க‌ள் சொல்லி கேட்டிருக்கிறாள்!!உன் புகைப்ப‌ட‌ங்க‌ளைப் பார்த்து ரசித்து, உன்னை காண‌ விரும்பியிருக்கிறாள்!!!

உன்னைக் காண‌ அவ‌ள் இன்று வ‌ருகிறாள்.
எங்குமே அவ‌ளை அழைத்துச் செல்லாத‌, அவ‌ள் த‌ந்தை என்ன‌ நினைத்தாரோ தெரிய‌வில்லை... 
அழைத்து வ‌ருகிறார் அவளை, உன்னைக் காண‌!!!
ம‌ழ‌லை ம‌ற‌ந்த‌, வீட்டுப்ப‌டி தாண்டா பேதை அவ‌ள் ...

உன் அருவிச் சார‌லோடு, ம‌ழைச் சார‌லைப் பொழிய‌ ம‌ற‌ந்து விடாதே, உன் க‌ர‌ங்க‌ளைத் தொட்டுப் பார்ப்ப‌வ‌ர்க‌ள் ப‌ல‌ராய் இருக்க‌லாம்...ஆனால் இவ‌ளுக்குப் பார்க்க‌ கிடைத்த‌ ஒரே அதிச‌ய‌ம் நீதான். 

அவ‌ள் ம‌ன‌தை ந‌னைத்த‌ ம‌ழைச் சாரலே... ஏ குற்றால‌ அருவியே ஏமாற்றி விடாதே அவ‌ளை!!!

ந‌ட்பு

ப‌ல‌ நாள் யோசித்தும்
முற்றுப்புள்ளி வைக்க‌ முடியாத‌
நான் எழுதும் அழகிய‌ க‌விதை...
ந‌ட்பு!!!

இவ‌ர்க‌ளும் குழ‌ந்தைக‌ள் தாம்!!!

குழந்தைகளைப் பார்த்து ரசித்ததுண்டா?
சேஷ்டை செய்யும் குழந்தை?
நச்சரிக்கும் குழந்தை?
அழுது கொண்டே இருப்பவன்?
நம்மை சிரிக்க வைப்பவன்?
துறுதுறு வென்று இருப்பவன்?
மழலையை பொழிபவன்?

இவன் எப்படி இருந்தாலும்
ரசித்திருக்கிறேன்...சிரித்திருக்கிறேன்...

இன்றோ ஏனடா இவனைப் பார்க்கிறோம்
என்று நினைக்க வைத்து விட்டார்களே !?
"அக்கா...அக்கா... இதை வாங்கிக்கோங்க
சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு...
பத்து ரூபாய்... தான் கா..."
எத்தனை பேரிடம் தான் பத்து ரூபாய் கொடுத்து வாங்குவது??

அந்தப்பொழுதில், ஐந்து நிமிடமாவது
அவ‌ர்க‌ளைப் ப‌ற்றி நினைத்துக்கொண்டு ந‌ட‌க்கிறேன்
நினைத்துக்கொண்டு ம‌ட்டுமே ...
எந்த‌ச் சல‌ன‌மும் இல்லாம‌ல் ...

Sunday, September 18, 2016

விடை தெரியா வினா

நீலமாய்
நீளமாய்
நீண்ட வெளி

அழகாய்
ஆழமாய்
அண்டத்தின் சுழி

வழி இல்லை
வழி மாறா
மாறா சுழற்சி

விசையோ
வினையோ
ஊழ் இதுவோ

கூட்டுக்குள் சிட்டாய்
நிச்சயிக்கப்பட்ட நிரந்திரம்

எதிர் விசை
எதிர்த்து நிற்கும் ஆசை
எதுவும் அறியா
ஆட்டி வைக்கப்பட்டிருக்கும்
அண்டத்தின் விதி
இதுவோ?

பூமியாய்
பொறுமையாய்
ஊழ் வினையோடே
உழல மனம்
ஒப்புவிக்குமோ?

காற்றாய்
எதிர் திசையாய்
கடலாய்
பொங்கு நுரையாய்
பொறுத்திருக்க மறுக்கும்
புயலாய்
எழுமோ?

எதுவும் கடந்து போகட்டும்


அருவெறுப்பு கம்பளிப்பூச்சி யாய் பிறந்தாய்
காய்ந்த சிறகாய் சிறையானாய்
சிறையை உடைத்து சிறகை விரித்தாய்
கண்களுக்கு ஆனந்தம் படைத்தாய்
அருவெறுப்பு இப்போது அழகாய்?!

இரண்டு வாரங்கள் தான் உன் வாழ்க்கையா?
உன் சின்னஞ்சிறிய உடலுக்குள்
உள்ள மூளை
என்ன யோசிக்கும்
அந்த விதிக்கப்பட்ட பதினெந்து நாட்களில்?

உலகின் அழகிய மலரில் 
தேன் எடுக்கவா?

பறந்தே சென்று உலகின்
அழகை ரசிக்கவா?

உயிர் வாழ வேண்டி
யுக்தி தேடவா?

எந்த மலரிலும்
அதிக நேரம்
நீ அமர்ந்து கண்டதில்லை
அனைத்து மலரையும்
ருசிக்க எத்தனமா?

எது எப்படியோ
உன் பரபரப்பு
உறுதிச் சுறுசுறுப்பு
உடல் நிலை - மாறி மாறி
உயிர்த்து எழத் துடிக்கும் - உன்னதமும்
கண்களை மட்டுமல்ல
மனதையும் குளிர்விக்கிறது!

உன்னை நினைத்து


நிலவின் வெளிச்சக் கீற்று அழகாய்
முற்றத்தில் சிதறும் நேரம் சிறிதாய்
மனதில் ஒளிரும் நினைவு உனதாய்
கணத்தில் படரும் முறுவல் எனதாய்
உதட்டின் அருகில் அளவாய்.

சின்ன சின்ன கிளிகளே

சின்ன சின்ன கிளிகளே   தங்க முத்து வண்ணமே  என் சிறகு நீங்களே  பறக்கத்  துடிக்கிறேன்  வலிமை கொடுங்களேன்  மேகம் தொட வாருங்கள்  விண்மீன் காணலாம்...